நினைவேந்தல் தொடர்பில் அனுரவை எச்சரிக்கும் அலிசப்ரி

விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் இனவாதத்தை பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்த நிலையில், அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், நாம் அனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும் போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.

அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகால காயங்களை ஆற்றுவதற்குரிய மிக முக்கிய நகர்வாகும்.

இருப்பினும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது.

மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச் செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.

வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது.

மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.