அமரன் இயக்குனரை நேரில் சந்தித்த விஜய்

கடந்த தீபாவளி ரிலீஸ் ஆக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களை பெற்றது. அதுமட்டுமல்ல திரையுலக பிரபலங்களும் மிகப்பெரிய அளவில் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் இந்த படம் பார்த்துவிட்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இரண்டு புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. அதில் ஒன்று தற்போது எடுக்கப்பட்டது. இன்னொரு புகைப்படம் சரியாக 12 வருடம் 2 மாதம் 1 நாள் 15 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ள ராஜ்குமார் பெரியசாமி, “ஐ லவ் யூ விஜய் சார்.. நன்றி.. நான் உங்களுக்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்து வருகிறேன்.. கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்” என்றும் அதில் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களில் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜ்குமார் பெரியசாமி, கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அந்த படம் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்காத நிலையில் 7 வருடம் கழித்து இப்போது அதற்கெல்லாம் மொத்தமாக சேர்த்து அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசாக அளித்துள்ளது. அடுத்ததாக தனுஷ் நடிக்கும் அவரது 55 படத்தை இவர் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது