தலிபான்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்

பெண்கள் மருத்துவம் படிக்க தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

தாலிபான் ஆட்சி
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் புதிதுபுதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது, சிரித்து பேச கூடாது, ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல கூடாது என பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு சட்டங்களை இயற்றினர்.

மருத்துவம் படிக்க தடை
தற்போது பெண்கள் மருத்துவம் மற்றும் நர்சிங் படிப்புகளை பயில ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில், சில மாகாணங்களில் பெண்களுக்கு ஆண் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தடைவிதித்துள்ளனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இந்த முடிவு ஆப்கான் மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் காப்பகம், ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

தாலிபன் அரசின் இந்த முடிவிற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்லாமிய போதனைகளில் கல்வி முக்கியஇடத்தைப் பிடித்துள்ளது. இது ஆண்களும் பெண்களும் அறிவைப் பெறுவதை வலியுறுத்துகிறது. குர்ஆன் கற்றலின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது.

ரஷீத் கான் வருத்தம்
மேலும், இரு பாலினருக்கும் இருக்கும் சமமான ஆன்மீக மதிப்பினை அங்கீகரிக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சமீபத்தில் மூடப்பட்டது ஆழ்ந்த வருத்தமும் மிகுந்த ஏமாற்றமும் அளிக்கிறது. இந்த முடிவு அவர்களை மட்டுமல்ல, நிச்சயம் நமது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்.

தற்போது நமது நாடு மிகப்பெரிய இக்கட்டான ஒரு நிலையில் இருக்கின்றது. நமது நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் தேவை. குறிப்பாக மருத்துவத் துறையில் பெண்களின் சேவை வேண்டும். மருத்துவத் துறையில் ஏற்கனவே பெண் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குறைவாக இருப்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே தாலிபான்கள் தங்களுடைய தடையை மறுபரிசீலினை செய்து பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களையும் பங்காற்ற முன்னுரிமை வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வியை கொடுப்பது என்பது சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, அது நமது மார்க்கத்திலும் கண்டிப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.