பொதுவாகவே காலையில் இட்லிக்கு என்ன சட்னியை செய்வதென்று ஒரு குழப்பம் ஏற்படுவது வழக்கம் தான்.
வீட்டில் அடிக்கடி கார சட்னியை செய்யும் பழக்கம் கொண்டவர்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் கார சட்னியை செய்வார்கள்.
சற்று வித்தியாசமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு கார சட்னியை எவ்வாறு அசத்தல் சுவையில் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 8-10 (காரத்திற்கு ஏற்ப)
காஷ்மீரி மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 150 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புளியை சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றான அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதங்கவிட வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி, 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூண்டு கார சட்னி தயார்.