சட்டத்தரணிகள் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன் வைத்த கோரிக்கை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டங்களை நீக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் புதிய அமைச்சரவை மற்றும் 10ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்மைய தேர்தல்களில் மக்கள் வழங்கிய சட்டவாக்க ஆணையின்படி செயற்பட வேண்டும் என்றும், சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உட்பட பொது நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூட்டமைப்பு வாதிட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை
இந்த பதவியின் மூலம், அதிகார துஸ்பிரயோகம், அனைத்து பொது நிறுவனங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மற்றும் ஊழல்களை பல தசாப்தங்களாக குடிமக்கள் கண்டுள்ளனர்.

எனவே, பதவியேற்ற முதல் வருடத்தில் சில மாதங்களில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்கமுடியும் என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சிவில் உரிமைகளை நசுக்க அடுத்தடுத்த அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சட்டமாகும்.

இதனைக் கொண்டு, தனிஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ச்சியான அரசாங்கங்களால், கருத்து சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் பிற குடிமை உரிமைகள் நசுக்கப்பட்டன என்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டம்
இதனை தவிர, 2023ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்யுமாறும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அப்பால், இலங்கையின் பொதுப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி தொடர்பான கவலைகளையும் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது.

குறிப்பாக ருஹணு பல்கலைக்கழகத்தில் நிலவும் நெருக்கடியில் முன்னிலைப்படுத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்தில் எந்தவொரு தலையீடுகளின் போது, கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கேட்டுள்ளது.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததால், குறித்த விடயங்கள் தொடர்பான முன்னைய முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, தற்போதைய ஆணையுடன், மக்கள் பொறுப்புக்கூறலை அரசாங்கம் விரைந்து செயற்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.