உயர்தரப் பரீட்சை அலுவலர் கொடுப்பனவுகள் குறைப்பு!

2024 உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள இரண்டு சுற்று நிரூபங்கள் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

நவம்பர் முதலாம் திகதி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கையின்படி 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இடங்களுக்கு, தேர்வு மையங்களில் இருந்து தேர்வுத் தாள்களைக் கொண்டுச் செல்ல 1,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் நவம்பர் 8ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட மற்றுமொரு சுற்றறிக்கையில், 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கான போக்குவரத்து கொடுப்பனவு 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 750 ரூபாய், புதிய சுற்றறிக்கையின்படி 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 2 முதல் 5 கிலோமீட்டர் தூரத்துக்கான 500 கொடுப்பனவு, 300 ரூபாயாகவும், 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 ரூபாய், 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், புதிய சுற்றறிக்கை மூலம் இந்த போக்குவரத்து கொடுப்பனவுகளை திருத்தம் செய்து குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அவர், இந்த மாற்றம் கடமையாற்றும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பிரச்சினைக்குரிய நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அத்துடன், பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.