அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு !

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஜனவரி 20 அன்று பதவியேற்ற பின்னர், குடியேற்றம், எரிசக்தி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளதாகவும் ட்ரம்ப் உறுதியளித்தார்.

அமெரிக்காவின் மிகப் பெரிய குற்றவியல் விசாரணை எனக் கூறப்பட்ட 2021 ஜனவரி 6 தாக்குதலில் குறைந்தது 1,572 பிரதிவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக நுழைவது முதல் தேசத்துரோக சதி மற்றும் வன்முறைத் தாக்குதல் வரையிலான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

இவர்களில் 1,251 க்கும் மேற்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் மற்றும் 645 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.