இலங்கையர்கள் இருவருக்கு அமெரிக்கா பொருளாதார தடை!

பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கே அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையூட்டல் பெற்றதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இருவரினது குடும்ப உறுப்பினர்களும் தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

அதேவேளை அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட இருவரும் இல்லங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.