தயாரிப்பு – மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – சுகுமார்
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு – அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பஹத் பாசில்
வெளியான தேதி – 5 டிசம்பர் 2024
நேரம் – 3 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் – 3.25/5
2021ம் ஆண்டு வெளிவந்த ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்தில் சாதாரண கூலியாக வேலைக்குச் சேர்ந்த செம்மரக் கடத்தலைச் செய்யும் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவனாக அல்லு அர்ஜுன் உயர்வது வரை காட்டினார்கள். செம்மரக் கடத்தலைத் தடுக்க வரும் எஸ்பி பஹத் பாசிலுடன் அல்லு அர்ஜுனுக்கு ஆரம்பமாகும் மோதலுடன் முதல் பாகம் நிறைவுக்கு வந்தது.
இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசில் மோதல் ஒரு பக்கம் இருக்க, மாநிலத்தின் முதல்வரையே மாற்றக் கூடிய சக்தியாக அல்லு அர்ஜுன் எப்படி வளர்கிறார் என்பதைக் கதையாக வைத்திருக்கிறார்கள்.
முதல்வராக இருக்கும் ஆடுகளம் நரேனை சந்திக்கும் போது அவருடன் தனது கணவர் அல்லு அர்ஜுன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ரஷ்மிகா மந்தனா. ஆனால், கடத்தல்காரனுடன் புகைப்படம் எடுப்பதா என மறுக்கிறார் நரேன். அதனால், தங்கள் சிண்டிகேட்டில் ஒருவராக இருக்கும் எம்.பி ராவ் ரமேஷை முதல்வராக்குகிறேன் என களத்தில் இறங்குகிறார் அல்லு அர்ஜுன். அதற்காக 2000 டன் செம்மரத்தைக் கடத்தும் வேலையை ஆரம்பிக்கிறார். அந்தக் கடத்தல் நடந்ததா, ராவ் ரமேஷை அல்லு அர்ஜுன் முதல்வர் ஆக்கினாரா என்பதுதான் இந்த இரண்டாம் பாகமான ‘புஷ்பா – தி ரூல்’ படத்தின் கதை.
முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா காதல், அல்லு அர்ஜுனின் படிப்படியான வளர்ச்சி, மற்ற கடத்தல்காரர்கள் என பயணித்தது கதை. இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகாவின் கணவன், மனைவி பாசம், மாநில முதல்வரையே மாற்றக் கூடிய அதிகார பலம், குடும்ப சென்டிமென்ட் என பக்கா கமர்ஷியல் மசாலாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார்.
முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் ஹீரோயிசம் தெறிக்க விடுகிறது. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் தெலுங்கு சினிமாவில் இதுவரை பார்த்திருக்காத அளவிற்கு அதிரடியாக உள்ளது. புஷ்பா கதாபாத்திரத்தில் மனைவியிடம் ‘பிளவர்’ ஆகவும், பஹத் பாசிலுடன் ‘பயர்’ ஆகவும், எம்.பி, முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளுடன் ‘வைல்டு பயர்’ ஆகவும் அதிரடி காட்டுகிறார் அல்லு அர்ஜுன்.
முதல் பாகத்தில் கொஞ்ச நேரமே வந்த பஹத் பாசில், இந்த இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கான முடிவு மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருந்தாலும், அதிரடி பலம் வாய்ந்த அல்லு அர்ஜுனை எதிர்ப்பதில் தனது அதிகார பலத்தை அட்டகாசமாக பிரயோகிக்கிறார்.
யாருக்கும் அடங்காத அர்ஜுனை அடக்கும் ‘பீலிங்ஸ்’ கொண்டவராக ரஷ்மிகா. மிக தாராளமாகவே நடித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கிடையில் முதல் பாகத்தில் காதலில் ரசிக்க வைத்தவர்கள், இந்த இரண்டாம் பாகத்தில் காமத்தில் கலங்க வைக்கிறார்கள்.
எம்.பி ராவ் ரமேஷ், முதல்வர் ஆடுகளம் நரேன், மத்திய அமைச்சர் ஜெகபதி பாபு, முன்னாள் சிண்டிகேட் தலைவர் சுனில், சப் இன்ஸ்பெக்டர் பிரம்மாஜி, புஷ்பாவின் வலதுகரம் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ‘கிஸ்ஸிக்’ என்ற ஒரே ஒரு பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரீலீலா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முதல் பாகத்தில் முதலில் கேட்ட போதே நம்மை ஈர்த்த பாடல்கள் இந்தப் படத்தில் கொஞ்சம் சுமாராகவே ஈர்க்கிறது. பின்னணி இசையில் பரபரக்க வைத்திருக்கிறார். கூடுதல் பின்னணி இசையை சாம் சிஎஸ் கொடுத்திருக்கிறார்.
மிரோஸ்லா குபா புரோசெக் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை இன்னும் கூடுதலாகக் காட்டுகிறது. பீட்டர் ஹெய்ன், டிராகன் பிரகாஷ், கேச்சா, நவகாந்த் ஆகியோரது சண்டைக் காட்சிகள்தான் இந்தப் படத்தின் ஹைலைட்.
இடைவேளை வரையிலான முதல் பாதி பரபரப்பாகவும், ஹீரோசியசத்துடனும் விறுவிறுப்பாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின் படம் அப்படியே சென்டிமென்ட் பக்கம் போய்விடுகிறது. பஹத் பாசில் கதாபாத்திரத்திற்கு ஒரு முடிவை சொன்ன பிறகு அடுத்து யார் எதிரியாக வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அது அரசியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்ததும் சற்றே தடுமாறுகிறது. அப்படியே சில லாஜிக் மீறல்களையும் கவனித்திருக்கலாம்.
மூன்று மணி நேரத்திற்கு மேல் படம் ஓடினாலும் போவது தெரியாமல் ஒரு மாஸ் என்டர்டெயின்மென்ட்டைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.