யாழில் (Jaffna) இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் (Dr. Kumudu Weerakoon) தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்
மேலும், கடந்த வருடம் 9,000இற்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம்
நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எலிக் காய்ச்சலின் அறிகுறிகளான வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பகால சிகிச்சையானது நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம், இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.