மீண்டும் நாட்டில் தலைதூக்கும் மின்சார மாபியா !!

இலங்கையில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடலாம் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையானது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாகவும் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

மின்சார மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது

மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை முன்வைப்பதற்காக கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திரமாக, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்காததால், பல காலமாக இயங்கி வந்த மின்சார மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா முக்கிய காரணியாக மாறியுள்ளதாகத் தெரிவித்த நந்தன உதயகுமார, நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் இருக்கும்போது தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் என்றும் குறிப்பிட்டார்.

மின்சார சபை அதிகாரிகள் அவ்வாறு செயற்பட்டால் அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரம் வாங்குவதற்கு மின்சார சபையிடம் பணம் இருக்காது எனவும் அவர் கூறியுள்லார்.

அவ்வாறு ஒரு நிலையில் ஏற்பட்டால் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.