டிரம்பின் பதவியேற்புக்கு அழைக்கப்பட்ட சீன ஜனாதிபதி!

டொனால்ட் டிரம்ப் , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என பலதரப்புகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் இன் பதவியேற்பு நிகழ்வில் மேலும் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் மாதத்தில் டொனால்ட் டிரம்ப் இதற்கான அழைப்பை விடுத்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த அழைப்பினை சீன ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெளிவாகவில்லை.

அதேவேளை வோசிங்டனில் உள்ள சீன தூதரக பேச்சாளர் இது குறித்து கருத்துதெரிவிக்கவில்லை. டிரம்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் சீன ஜனாதிபதி குறித்து தொடர்ந்தும் கடும் விமர்சனத்தை கொண்டுள்ளன.

அதோடு டிரம்ப் தனது வெளிவிவகார செயலாளராக தெரிவு செய்துள்ள மார்க்கோ ருபியோவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தெரிவு செய்யப்பட்டுள்ள மைக்வோல்ட்சும் அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதியாக பதவியேற்றதும் சீன பொருட்களிற்கான வரியை அதிகரிப்பேன் என டிரம்ப் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.