தயாரிப்பு – பிரைடே பிலிம் பேக்டரி
இயக்கம் – பிரசாந்த் முருகன்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
நடிப்பு – பரத், ஷான், அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர்
வெளியான தேதி – 13 டிசம்பர் 2024
நேரம் – 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் – 2/75/5
ஒரு துப்பாக்கி, நான்கு முக்கிய கதாபாத்திரங்கள், சில கொலைகள்… இவற்றின் பின்னணி என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அருமையான திரைக்கதையாக மட்டும் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால் மெட்ராஸ் கடந்தும் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தைக் கொடுத்தற்காக இயக்குனர் பிரசாந்த் முருகனைப் பாராட்டலாம்.
பரத் ஒரு ஆட்டோ டிரைவர், அவரது மனைவியின் கிட்னி மாற்று சிகிச்சைக்கு 15 லட்சம் பணம் தேவைப்படுகிறது. சாதி வெறி பிடித்த அப்பாவை மீறி பவித்ரா லட்சுமி காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். வாங்கிய சில ஆயிரம் கடனுக்காக, கடன் கொடுத்தவரின் மிரட்டலால் தவிக்கிறார் துப்புரவுத் தொழிலாளியான அபிராமி. திருமணம் செய்து கொண்டு சென்ற வீட்டில் ஒரு சிக்கலான பிரச்சனையை சந்திக்கிறார் அஞ்சலி நாயர். இந்த நான்கு முக்கிய கதாபாத்திரங்களுக்கும், ஒரு துப்பாக்கிக்கும், சில கொலைகளுக்கும் ஒரு முடிச்சு உண்டு. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நான்கு கதாபாத்திரங்களின் சம்பவங்களையும் ஒன்றுக்கு அடுத்து மற்றொன்று என காட்டிக் கொண்டே போகும் திரைக்கதைதான் இந்தப் படத்தில் சாதாரண ரசிகனையும் குழம்ப வைக்கும். அதையும் துண்டுத் துண்டுக் காட்சிகளாகக் காட்டியிருப்பதுதான் திரைக்கதையின் சிக்கல். ஒன்றை முழுதாக முடித்து மற்றொன்றாகக் காட்டியிருக்கலாம். அல்லது ஆந்தாலஜி டைப்பில் தனித்தனி கதைகளாகக் காட்டி கிளைமாக்சில் மட்டும் அனைத்தையும் ஒன்று சேர்த்திருக்கலாம். இப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்குமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சாதி வெறி அதிகம் உள்ளவர் தலைவாசல் விஜய். அவரது மகள் பவித்ரா லட்சுமி காதல் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வந்ததுமே கோபத்தில் தடுமாறுகிறார். எப்படியாவது அதைத் தடுக்க வேண்டும் எனத் துடிக்கிறார். அவசரத்தில் அவர் செய்யும் முடிவு எவ்வளவு மோசமானது என்பதை பின்னர் புரிந்து கொள்கிறார். இந்தக் கதையில் பவித்ரா லட்சுமியை விட தலைவாசல் விஜய்க்குத்தான் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
கிரிமினலாக இருந்து மனம் மாறி ஆட்டோ ஓட்டுபவராக பரத். காதல் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்குப் பணம் கிடைக்காமல் தவிக்கிறார். ஒரு கொலையைச் செய்தால் பணம் கிடைக்கும் என்று வரும் போது மனைவிக்காக அதைச் செய்கிறார். ஆனால், அதுவே அவரது மனைவியின் சிகிச்சைக்கும் சிக்கலாக வந்து நிற்கிறது. மற்ற கதாபாத்திரக் கதைகளுடன் ஒப்பிடும் போது, இந்தக் கதை நிறையவே நெகிழ வைக்கிறது. பரத்தின் தோற்றமும் நடிப்பும் அவரது கதாபாத்திரத்தில் நிறைவாக அமைந்திருக்கிறது.
துப்புரவுத் தொழிலாளியாக அபிராமி. திருநங்கையாக மாறிய தனது மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளார். அவரைப் படிக்க வைத்து டாக்டராக்க வேண்டும் என நினைக்கிறார். வாங்கிய எண்பதாயிரம் கடனுக்காக கடன் கொடுத்தவர் மிரட்ட என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் அபிராமி சற்றே பொருத்தமில்லாமல் இருந்தாலும் தனது நடிப்பால் அதைப் பொருத்தமாக்க முயற்சித்துள்ளார்.
திருமண வாழ்க்கை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக கனவுடன் நடக்கும் ஒன்று. ஆண்களை விட திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டுக்குச் செல்லும் பெண்களின் கனவுகள் அதிகம். அப்படியான கனவுடன் சென்ற அஞ்சலி நாயருக்கு கணவர் வீட்டில் நடக்கும் கொடுமை என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு கொடுமையிலிருந்து அஞ்சலி எப்படி மீண்டு வருகிறார் என்பது, இப்படியும் நடக்குமா என அதிர்ச்சியடைய வைக்கிறது.
இந்த நான்கு கதைகளும், ஒரு காலத்தில் சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் கற்பனையில் எழுதப்பட்ட கதைகள். தனது வீட்டில் மாங்காய் பறித்தான் என்பதற்காக சிறுவன் ஒருவனை சுட்டுக் கொன்றார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர். அதை அடிப்படையாக வைத்து, இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
ஜோஸ் பிராங்க்ளின் இசை, காளிதாஸ், கண்ணா இருவரது ஒளிப்பதிவும் கதையுடனும், கதாபாத்திரங்களுடனும் சேர்ந்து பயணித்திருக்கிறது.
கதாநாயகர்களின் பின்னால் தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கதைகளின் பின்னால் செல்லும் சினிமாக்கள் வரவேற்கப்பட வேண்டியவை.