யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை அதிகாரி ஒருவர் உழவு இயந்திரத்தால் மோதவந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.
வீடியோ எடுத்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்
கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக் கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர்.
இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்துள்ளார்.
அதோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.