சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
2025 பெப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸெண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் ட்ரோகன் குழு-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பெப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவலை நாசாவின் விண்வெளி திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார்.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது.
விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.