ரஷியாவின் குடியிருப்பு மீது டிரோன்கள் தாக்குதல்

ரஷியா- உக்ரைன் இடையே டிரோன் தாக்குதல் அதிகரித்து வருகிற நிலையில் ரஷியாவின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்ரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்துவதால், ரஷியாவும் உக்ரைனுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள கசான் நகர் (டார்டஸ்டன் குடியரசு தலைநகர்) மீது உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் இரண்டு டிரோன்கள் மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய கட்டடங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிகிறது. இந்த டிரோன் தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.