தென்கொரிய பதில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை

தென்கொரிய நாடாளுமன்ற பதில் ஜனாதிபதி ஹான் டக் சூவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்குகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றம் தெரிவு செய்த மூன்று நீதிபதிகளின் நியமனத்தை பதில் ஜனாதிபதி தடுத்தார்.

அதை தொடர்ந்தே நாடாளுமன்றம் அவருக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தது. வாக்களித்த 192 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 151க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(27) வாக்களிப்பு இடம்பெற்றவேளை நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பநிலை நிலவியது.

அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்ற 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாத்திரம் போதுமானது என சபாநாயகர் தெரிவித்தமைக்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்தின் முன்னால் சென்று அதிகார துஸ்பிரயோகம் செல்லுபடியற்றது என கோசமிட்டனர். சபாநாயகரை பதவி விலகுமாறு வேண்டுகோள் விடுத்த அவர்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

அதேவேளை தென்கொரிய வரலாற்றில் பதில் ஜனாதிபதியொருவருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல்தடவை ஆகும்.