தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. அதன் பிறகு ‘சரவணன் இருக்க பயமேன், ராஜதந்திரம், மாநகரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், விஷாலின் ‘சக்ரா’ படத்தில் வில்லியாக நடித்தார்.
தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரெஜினா அளித்துள்ள ஒரு பேட்டியில், ”என்னுடைய அப்பா முஸ்லிம், அம்மா கிறிஸ்டியன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன் காரணமாக முஸ்லிம் பெண்ணாகவே வளர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால், என் தாயாரின் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறேன். சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டேன். அதன்பிறகுதான் ரெஜினா என்ற எனது பெயருடன் கசெண்ட்ரா என்பதை இணைத்துக் கொண்டேன்” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ரெஜினா.