கழுதை பாலை குடிக்கலாமா?

சென்னை: வழக்கமாக நாம் வீடுகளில் பசும்பால் அல்லது எருமைப் பாலை தான் எடுத்துக் கொள்வோம். ஆனால், சமீப காலங்களாகவே கழுதைப் பாலை எடுத்துக் கொள்ளும் டிரெண்ட் கணிசமாக அதிகரித்துள்ளது. கழுதை பாலில் கொட்டி கிடக்கும் மருத்துவ நன்மைகளே இதற்குக் காரணமாகும். கழுதை பாலில் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பசுவின் அல்லது எருமைப் பால் அளவுக்குக் கழுதை பால் அதிகம் பிரபலமானது இல்லை. இருப்பினும், சமீப ஆண்டுகளாகக் கழுதை பாலின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு பலரும் அதை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கழுதை பால்: சருமத்தை பாதுகாப்பது முதல் ஊட்டச்சத்து வரை எருமைப் பாலில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே விலை அதிகமாக இருந்தாலும் கூட பலரும் கழுதைப் பாலை விரும்பி குடிக்கிறார்கள். அப்படி கழுதைப் பாலை குடிப்பதால் என்ன நன்மைகள் எல்லாம் நமக்குக் கிடைக்கிறது.. இதில் எதாவது சிக்கல் வருமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கழுதை பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்து ஃபுட் சயின்ஸ் அண்ட் பயோடெக்னாலஜி இதழில் விரிவான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் உடலுக்குத் தேவையான தாதுகளும் கழுதைப்பாலில் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எலும்பு வலிமையை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, பார்வை திறனை மேம்படுத்துவது என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியமானதாக இருக்கிறது.

முக்கியம்: மேலும், மாட்டுப் பாலை நமது உடலால் எளிதாக ஜீரணிக்க முடியாது. இது பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், அத்துடன் ஒப்பிடும்போது கழுதை பால் எளிதாக ஜீரணமாகும். எனவே, செரிமான பிரச்சனைகள் இருப்போருக்கு கழுதை பால் ஏற்றதாக இருக்கும். கிட்டதட்ட தாய்ப்பாலை ஒத்து இது இருப்பதால் செரிமானத்திற்கு இது முக்கிய பங்களிக்கிறது.. கழுதைப் பாலில் சேச்சுரேட்டட் கொழுப்பு குறைவாகவும், அன்-சேச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதால் எளிதாகச் செரிமானமாகும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எல்லாவற்றையும் விடக் கழுதை பால் சருமத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கழுதை பாலில் இதர நன்மைகள் குறித்துத் தெரியும் முன்பே, பல காலமாகவே சரும பாதுகாப்பிற்குக் கழுதை பாலை பலரும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கழுதை பாலில் உள்ள புரதங்கள் மற்றும் லிப்பிடுகள் சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் எரிச்சலைக் குறைக்கவும் உதவும்.

கொழுப்பு குறைவு: மேலும், கழுதை பால் சருமத்திற்கு க்ளோ (glow) தருவதாகவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மாட்டின் பாலுடன் ஒப்பிடும் போது கழுதைப் பாலில் கொழுப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. அதேநேரம் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் தேவையான அளவு இருக்கிறது. இதனால் எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல மாற்றாக இருக்கிறது.

ஒரே ஒரு சிக்கல்: பொதுவாகக் கழுதை பால் காரணமாக அலர்ஜி ஏற்படாது என்ற போதிலும் வெகு சிலருக்கு மட்டும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு கழுதைப்பாலில் உள்ள புரதங்களால் இந்த அலர்ஜி ஏற்படலாம்.. சருமத்தில் எரிச்சல், அரிப்பு அல்லது சுவாச சிக்கல் கூட ஏற்படும். எனவே, ஆரம்பத்தில் குறைந்த அளவே கழுதைப் பாலை எடுத்துக் கொள்ளவும்.