பியாங்யாங்: வடகொரியாவில் அடிக்கடி சில வித்தியாசமான தண்டனைகள் அறிவிக்கப்படுகின்றன. புதிய சட்டங்கள், கொடுமையான தண்டனைகள் என மக்கள் பயந்துக்கொண்டிருக்கையில், ஹாட் சாப்பிட்டால் (Hot Dog) தேச துரோகம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலகள் எதுவும் நேரடியாக வடகொரியாவிலிருந்து வெளியே வரவில்லை. தென்கொரிய ஊடகங்கள் வழியாகத்தான் தெரிய வந்திருக்கிறது. கிடைக்கப்பட்ட தகவலின்படி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கலாச்சாரத்தை வடகொரிய மக்கள் பின்பற்றுவதை அந்நாட்டு அதிபர் விருப்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே அதற்கு எதிராக தொடர் பிரசாரங்கள் அரசு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபுறம், இந்த அறிவுறுத்தலை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்படுகின்றன.
இப்படி சமீபத்தில் வெளியாக அறிவிப்பில் ஒன்றுதான் ஹாட் டாக் சாப்பிடக்கூடாது எனும் அறிவிப்பு. இந்த வகை உணவுகள் பெரும்பாலும் அமெரிக்க நாடுகளிலும், பிரிட்டனிலும் சாப்பிடப்படுகிறது. ரொட்டி துண்டுக்கு நடுவில் வறுத்த அல்லது வேகவைத்த இறைச்சி கொடுக்கப்படும். இதுதான் ஹாட் டாக். வடகொரியாவில் இதை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சமீபத்திய உத்தரவு தெரிவித்திருக்கிறது. எதற்கான இந்த தடை உத்தரவு என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. பொதுவாக அமெரிக்க கலாச்சாரங்களை வடகொரியா ஏற்றுக்கொள்வதில்லை. ஹாட் டாக் தடை உத்தரவும் இதன் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உணவு மட்டும் கிடையாது ஆடை விஷயத்தில் கூட வடகொரியா ஏற்கெனவே பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் குட்டை பாவாடை அணிவதை இந்நாடு தடை செய்திருக்கிறது.