முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட, அத தெரண “பிக் ஃபோகஸ்” நிகழ்ச்சியில் இன்று இணைந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“முச்சக்கர வண்டியில் மாற்றம் செய்தால், அசல் மொடலில் எந்த மாற்றமும் செய்யாமல் வாகனத்தின் புத்தகத்தில் உள்ளிடப்பட வேண்டும். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று அரசாங்கத்திற்கு பணம் செலுத்தி மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலகுவாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஜூலை 7, 2023 முதல் முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.
இங்கு, முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக உபகரணங்கள் பொருத்துதல் மற்றும் அலங்காரம் செய்வதற்காக முச்சக்கரவண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, திணைக்களம் பல நிபந்தனைகளின் கீழ் இந்த அனுமதியை வழங்கியதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வாகனங்களின் பல்வேறு வகையான ஒலிப்பான்கள் பொருத்துதல்கள், பல்வேறு நிறங்களிலான வண்ண மின்விளக்குகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவதற்கு சாரதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதன்படி, பல்வேறு ஒலிப்பான்கள், வெவ்வேறு வண்ண மின்விளக்குகள், சட்டவிரோத பொருத்துதல்கள், அதிக சத்தத்துடன் கூடிய ஒலிப்பான்கள், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், விபத்துக்களை அதிகரிக்கும் வகையில் உதிரி பாகங்களை பொருத்துதல் போன்ற வாகனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் முன்னோடித் திட்டமாக சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 19ஆம் திகதிக்கு முன்னர் அந்த சட்டவிரோத பொருத்துதல்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
குறித்த காலத்தின் பின்னர் அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.