கொழும்பை அண்மித்த ஹங்வெல்ல பிரதேசத்தில், வெளிநாடு செல்வதற்கான பணத்தை தேடிக்கொள்வதற்காக ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதியொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் ஐஸ் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த யுவதி இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளதாகவும், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான பணத்தைத் தேடிக் கொள்வதற்காக ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
டுபாயில் தலைமறைவாக வாழும் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர் மூலமாக வழங்கப்பட்ட ஐஸ் போதைப் பொருளையே குறித்த யுவதி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.