கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது.
இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவமதால், உயர் நார்ச்சத்து உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து காரணமாக உடல் பருமன் வேகமாக குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும், இது நரம்புகளில் படிந்திருக்கும் பிளேக்கைக் குறைக்க உதவுகிறது.
இது நரம்புகளில் உள்ள அடைப்பைத் திறந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கொண்டைக்கடலையை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – 250
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – அரை மூடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் – 1 தே.கரண்டி
தனியாத் தூள் – 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க- கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கொண்டைக் கடலையை பேட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரவே ஊறவைத்துவிட வேண்டும்.
காலையில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் சூடானதும், கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் ஊறிய கடலையை போட்டு நன்கு கிளறிவிட்டு புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரையில் வேகவிட்டு இறுதியில் மல்லி இலை தூவினால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில், ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக் கடலைக் குழம்பு தயார்.