டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து அமைச்சரின் அறிவிப்பு!

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் யாரும் வீணாக அச்சப்பட தேவையில்லை எனவும் மக்களின் தரவுகளை இந்திய நிறுவனத்துக்கோ இலங்கை நிறுவனத்துக்கோ கையாள முடியாது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weerarathna) தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் நேற்று (15) ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமே அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும். அதன் பிரகாரம் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதன் பிரகாரம் அனைத்து புதிய தேசிய அடையாள அட்டைகளும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாறும்.

தற்போது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இந்த அடையாள அட்டை முறையை நடைமுறைப்படுத்துவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 20 பில்லியன் ரூபாவாகும். நிதிச் சுமையைச் சமாளிக்க இந்தியாவின் உதவியின் மூலம் இந்த செலவில் பாதியை ஈடுகட்ட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை முன்முயற்சியில் இந்திய நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசியல் உள்நோக்கங்களுடன் செய்யப்படும் ஆதாரமற்ற கூற்றுக்களால் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முயற்சிக்கான உயிரியல் தரவு, பலராலும் கூறப்படுவது போல் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அது தொடர்பில் யாரும் அச்சப்பட தேவையில்லை. டிஜிட்டல் அடையாள அட்டையின் தொழில்நுட்ப அமைப்புக்கு மட்டுமே இந்திய நிறுவனம் எங்களுடன் சம்பந்தப்படுகிறது.

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் முன்னாள் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனத்திற்கு அணுகலை வழங்கியது, ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அந்த ஒப்பந்தம் திருத்தப்பட்டது.

திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்திய நிறுவனம் தொழில்நுட்ப அமைப்புக்கு மட்டுமே உதவும். உயிரியல் தரவைப் பதிவேற்றும் போது இலங்கைக்கு மட்டுமே இந்த அமைப்பை அணுக முடியும்.

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை முன்முயற்சியின் கீழ், கைரேகைகள், முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் கருவிழி அடையாளம் காணுதல் ஆகிய மூன்று முக்கிய தரவுகள் மட்டுமே உயிரியல் தரவுகளாக சேகரிக்கப்படும்.

அத்துடன் இந்த அடையாள அட்டை கட்டமைப்பை அரசாங்கமும் இலங்கையில் தனியார் நிறுவனமும் இணைந்தே மேற்கொள்ள இருக்கிறது. எவ்வாறு இருந்தாலும் இந்திய நிறுவனமோ இலங்கை நிறுவனமோ மக்களின் தரவுகளுக்குள் கை வைக்க முடியாது. அரச அதிகாரிகளே அதுதொடர்பில் செயற்படும்.

ஆள்பதிவு செய்யும் அதிகாரிகள் தற்போது மக்களின் தரவுகளை கையாள்வது போன்றே டிஜிட்டல் முறையிலும் இடம்பெறும். அதனால் டிஜிட்டல் அடையாள அட்டை நடவடிக்கையில் எமது தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என தெரிவித்தார்.