தலவாக்கலை(Talawakelle) – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தவறான முடிவெடுத்து, தாயொருவர் மகனுடன் உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவத்தில் காணாமல்போயிருந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை காவல்துறையினரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் சிறுவனின் சடலம் இன்று(17.01.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தினேஷ் ஹம்சின் என்ற 4 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குடும்ப தகராறு காரணமாக தனது நான்கு வயது மகனுடன் தாயொருவர் தவறான முடிவெடுத்து தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் நேற்று(16.01.2025) மாலை குதித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த தாய் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம்(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக 41 வயதான குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மரண விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.