அனுரவை எச்சரிக்கும் தபால் ஊழியர்கள்

நாட்டிலுள்ள தபால் ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதில் அநுர அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னரும் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் முன்னறிவிப்பின்றி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று(16.01.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவிக்கையில், “தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தபால் தொழிற்சங்கப் பிரதிநிதிகளே ஆரம்ப முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

இதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னர் சம்பளம் தொடர்பாக வழங்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறோம்.

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

அந்த வருடத்தின் பின்னர் சம்பளத்துடன் கொடுப்பனவுகள் இணைக்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறுவதில்லை.

அத்துடன், தபால் துறையில் 2,000 அதிகாரிகள் மற்றும் 4,000 இளநிலை பணியாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுகிறன.

தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.