நாட்டிலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள், அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட வருடாந்த ஆண்டறிக்கை (2023) இதனை வெளிப்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்குள், இந்தக் குழுவில் 77 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், சட்டத்தின்படி இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தின்படி 20 பேர் சேவையை விட்டு வெளியேறியதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 30 அதிகாரிகளுக்கு, அவர்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ரூ. 95 மில்லியன் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் மொனராகலை மாவட்டத்தில் 04 அதிகாரிகளுக்கு 40 மில்லியன் ரூபாவும், கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 17 அதிகாரிகளுக்கு 87 மில்லியன் ரூபாவும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள்
இந்த நிலையில், இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் விதிகளின்படி, அத்தகைய அதிகாரிகளின் நியமனங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக செலுத்தும் அனைத்து பணத்தையும் அந்த அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.