கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை எண்ணைகள் பல இருந்தாலும், நாமே தயாரித்து பயன்படுத்தும்போது தான், நமக்கென்று ஒரு மன நிறைவு வரும். ரசாயன கலப்பு இல்லாத எண்ணெய் என்ற நம்பிக்கையும் வரும்.
அப்படிப்பட்ட ஒரு மூலிகை எண்ணெய்யை பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் தடுத்து நிறுத்தப்படும். இள நரையும் தடுக்கப்படும்.
தேவையான பொருட்கள்: செக்கில் ஆடிய தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், நெல்லிக்காய் ஒரு கிலோ, கரிசிலாங்கண்ணி ஒரு கிலோ, சோற்றுக் கற்றாழை ஜெல் ஒரு கிலோ.
இவற்றில் நெல்லிக்காய், கரிசிலாங்கண்ணி ஆகியவற்றை கல் உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் சோற்று கற்றாழை ஜெல்லை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அத்துடன் வாசனைக்காக காய்ந்த மரிக்கொழுந்து குச்சிகள் அல்லது சந்தன வில்லைகளை தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம்.
மேற்கண்ட பொருட்கள் அடுப்பில் கொதித்து குறைந்த பட்சம் நான்கில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு சுண்டும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர், இறக்கி வைத்து சூடு ஆறும் வரை காத்திருந்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கூந்தல் எண்ணையை சாதாரணமாக தலையில் தடவிக் கொள்ளலாம். எண்ணெய் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் முடி உதிர்தல், இள நரை, பொடுகு போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். உடல் மற்றும் மண்டை சூட்டையும் தடுக்கும். குளிர்ந்த உடலை கொண்டவர்கள் கொஞ்சம் குறைந்த அளவே பயன்படுத்தவும்.
Post Views: 5