ஈரானைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் ‘டாட்டாலூ’ என்று பொதுவாக அழைக்கப்படும் அமீர் உசைன் மக்சவுத்லூவுக்கு (வயது 37) உச்ச நீதிமன்றம்மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவர் ஈரானின் இளைய தலைமுறையினரின் அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து அடிக்கடி வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், நபிகள் நாயகத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் அமீர் உசைன் 2018-ம் ஆண்டிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்த நிலையில் துருக்கி பொலிஸார் அவரை 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.