வாகனங்களின் விலை குறைவடையலாம் அமைச்சரின் அறிவிப்பு!

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது வாகன விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின்போது கருத்துரைத்த அமைச்சர் ஹேரத், வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும், கடைசி கட்டமே தனியார் வாகனங்களுக்கானது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் அதே வேளையில் வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்படும் என்றும் வரி வரிகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய போட்டி விலையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வரும்போது, வாகன விலையில் குறைவு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதையும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாகனத்தைப் பயன்படுத்த இரண்டு மாற்று வழிகள் இருப்பதாகக் கூறிய அமைச்சர், தமக்கு வழங்கப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தி 05 ஆண்டுகளின் முடிவில் அதை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பித் தரலாம், அல்லது அவர்களின் பதவிக்காலத்தின் முடிவில் வாகனத்தின் தற்போதைய விலையை அரசாங்கத்திடம் செலுத்தி உரிமையைப் பெறலாம் என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.