மட்டன் சுக்கா வித்தியாசமான முறையில் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர்.
சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும். தற்போது மட்டன் சுக்கா வறுவல் சற்று வித்தியாசமான முறையில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு…
அன்னாசிப்பூ – சிறிது
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 5
ஏலக்காய் – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 3/4 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கசகசா – 3/4 டீஸ்பூன்
மல்லி – 1 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – 2 கொத்து
வரமிளகாய் – 7
காஷ்மீரி வரமிளகாய் – 2
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மட்டன் – 1 கிலோ
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (அரைத்தது)
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – சிறிது
செய்முறை:
வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் அன்னாசிப்பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, மல்லி, பிரியாணி இலை, கறிவேப்பிலை, வரமிளகாய், காஷ்மிர் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும். பின்பு இந்த பொடியை அகலமான பாத்திரத்தில் சேர்த்து, அதில் நல்லெண்ணெய், சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்து கொள்ளவும்.
பின்பு இந்த பேஸ்ட்டில் மட்டனை சேர்த்து நன்று பிரட்டி எடுக்கவும். பின்பு குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய், சின்னவெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, வரமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து நன்று வதக்கிய பின்பு தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
தொடர்ந்து மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மட்டன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.
பின்பு குக்கரை திறந்து அதனை அடுப்பில் வைத்து மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா வறுவல் தயார்.