கருப்பை தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.
இதன்படி, எண்டோமெட்ரியோசிஸ் நோய் தாக்கம் என அழைக்கப்படுவது, மாதவிடாய் காலங்களில் வெளியேறும் மாதவிடாய் ஆனது, உள்நோக்கி சென்று சினைக்குழாய் வழியாக சினைப்பையை அடைந்து விடும்.
இது சில நேரங்களில் சிறு மற்றும் பெருங்குடல், மலக்குடல், சிறுநீர்ப்பை, நுரையீரல் மற்றும் மூளை போன்ற இடங்களில் படிந்து விடும் நிலையாகும்.
கர்ப்பபையின் உள் சுவரில் இருக்க வேண்டிய கழிவுகள் கருப்பையை விட்டு வெளி இடங்களில் தங்குவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த கழிவுகளால் ஏற்படும் கட்டிகள் சினைப்பை எனும் ஓவரியில் கட்டிகள் ஏற்பட அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.
பார்ப்பதற்கு ப்ரவுன் நிறத்தில் சாக்லேட் போன்று இருப்பதால் சினைப்பையில் வரும் எண்டோமெட்ரியோசிஸ் நோயை “சாக்லேட் சிஸ்ட்”(chocolate cyst) என்றும் ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள்.
அந்த வகையில், Endometriosis நோய் தாக்கம் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் யாருக்கு வரும்?
“எண்டோமெட்ரியோசிஸ்” (Endometriosis) எனும் நோயின் தாக்கம் 15 முதல் 45வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படலாம். அத்துடன் இது கர்ப்பபையின் உட்புற சுவரில் இருப்பதால் கண்டறிவது கடினமாக இருக்கும். பருவமடைந்த பெண்களுக்கு 28 நாட்களுக்க ஒரு முறை மாதவிடாய் வரும். அதில் கோளாறுகள் ஏற்படும் பொழுது உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
Endometriosis நோயின் அறிகுறிகள்
1. சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் பொழுது அடி வயிற்றில் மிகக் கடுமையான வயிற்று வலி ஏற்படும். அந்த காலப்பகுதியில் அது இயற்கை என இருக்காமல் உரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது அவசியம்.
2. மாதவிடாய் கால வலி என்பது பொதுவானது. ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாதாரணமாக இருக்காது. தாங்க இயலாத வலியாக இருக்கும். எனவே மாதவிடாய் குறித்து போதுமான தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. வயிற்றில் வலி ஏற்படும் அதே சமயத்தில் முதுகுப்பகுதிக்கு வலி பரவும். இதனால் அமரக் கூட முடியாத நிலை ஏற்படும்.
4. வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகள் அடிக்கடி வர வாய்ப்பு உள்ளது. என்ன பிரச்சினையாக இருந்தாலும் முறையான கவனம் அவசியம்.
5. சிலருக்கு அடிக்கடி மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வெளியில் செல்லும் பொழுது அவர்கள் டயப்பர் அணிந்து கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்படியானவர்களுக்கு Endometriosis தொற்றாகவும் இருக்கலாம். எனவே ஆரம்ப காலங்களில் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.
6. எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இது இயற்கைக்கு மாறான அறிகுறி என்பதால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
7. திருமணம் செய்த பின்னர் தம்பதிக்கு உறவில் இருக்க முடியாத நிலை ஏற்படும். இப்படியான நேரங்களில் கடுமையாக வலி இருப்பதால் உறவில் உள்ள ஈடுபாடு குறைய ஆரம்பிக்கும்.
8. மாதவிடாயின் போது அதிக ரத்தம் வெளியேறி அதனால் ரத்த சோகை நோய் (Anemia) உண்டாகும். இதனால் உடல் சோர்வு இருக்கும். வெளியில் செல்லும் பெண்கள் இதனால் வேலைகளை சரியாக செய்ய முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
9. சினைப்பையில் சாக்லேட் சிஸ்ட் இருந்தால் கர்ப்பமடைவதில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் சரியான நேரத்தில் கர்ப்பம் அடைய முடியாமல் கர்ப்பம் தள்ளிப்போகும். இது சமூகம் சார்ந்த அழுத்தங்களை ஏற்படுத்தும்.
10 இப்படியான பிரச்சினைகள் காரணமாக அதிக மன அழுத்தம் , கோபம் , விரக்தி ஆகிய உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.
Endometriosis நோயின் அறிவியல் காரணங்கள்
1. Endometriosis நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்தத்தில் அதிகமான அளவு ஈஸ்ட்ரோஜென் மற்றும் குறைவான ப்ரோஜெஸ்ட்ரான் இருக்கும். ஒரு சாதாரண நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் சம பங்கீட்டில் வேலை செய்ய வேண்டும். ஈஸ்ட்ரோஜென் அதிகமானால் இது போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படும்.
2. எண்டோமெட்ரியோசிஸ் – ஆட்டோ இம்யூன் வியாதியாகவும் பார்க்கப்படுகிறது. ஆட்டோ இம்யூனிட்டி என்பது ஒருவரின் உடலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியே அவரை எதிர்க்கும் செயன்முறையாகும். எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் சுய எதிர்ப்பு காரணிகள் (auto antibodies ) அதிகம் தென்படுவதை அறிய முடிகிறது.
3. ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருப்பவர்களுக்கு ஊறு செய்யும் ப்ராஸ்டாக்லான்டின்கள் எனும் ஹார்மோன்கள் அதிகமாக உருவாக்கப்படுவது புலனாகிறது . அதன் விளைவாக அதிக அளவில் உள்காயங்கள் (inflammation) ஏற்படும். இதுவே நாளடைவில் பிரச்சினையாக மாறுகின்றது.
4. தீவிர மன அழுத்தமும் (stress) உள்காயங்களை உருவாக்குவதில் அதீத பங்கு வகிக்கிறது என்பதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிகிச்சை
மாதவிடாயின் போது ஏற்படும் அதீத வலிக்கான வலி நிவாரணிகளை மருத்துவ ஆலோசனைகள் மூலம் எடுத்து கொள்ளலாம்.
ஹார்மோன் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதனை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
ரத்தத்தில் ப்ரொஜஸ்ட்ரோன் அளவுகளைக்கூட்டி ஈஸ்ட்ரோஜென் அளவுக்குளைக் குறைக்கும் கருத்தடை மாத்திரைகள் உள்ளன. அவற்றை வாங்கி மருத்துவரின் ஆலோனையுடன் பயன்படுத்தலாம்.
ரத்த ஈஸ்ட்ரோஜெனை எதிர்த்து கட்டுப்படுத்தும் மாத்திரைகளை சிலர் பரிந்துரைப்பார்கள். இது போன்ற மாத்திரைகள் எல்லா நேரங்களிலும் பயனளிக்காது.
அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை எடுக்கும் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஏனெனின் எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஆட்டோ இம்யூன்வியாதியாக இருப்பதால் அந்த நோயை உண்டாக்கும் காரணியை நாம் களையாமல் நோயைக் கட்டுப்படுத்த இயலாது.