இந்த ஆடைகளை மட்டும் வாஷிங் மெஷின் தோய்த்திடாதீங்க

பொதுவாக நமது அன்றாட பணிகளை இலகுப்படுத்துவதற்காக சந்தையில் நாளுக்கு நாள் புது புது இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் ஒன்று தான் வாஷிங் மெஷின். இந்த இயந்திரம் எவ்வளவு ஆடைகள் இருந்தாலும் அதனை விரல் விட்டு எண்ணும் மணி நேரத்திற்குள் கழுவி, உலர்த்தி கையில் கொடுத்து விடும்.

இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் இன்றும் ஒரு சிலரால் வாஷிங் மெஷின் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதில் என்னென்ன ஆடைகளை போடுவது? என்ற சந்தேகம் இருக்கும்.

இன்னும் சிலர் எல்லா வகையான ஆடைகளையும் ஒன்றாக வாஷிங் மெஷினில் போட்டு, ஆடையின் தரத்தை குறைத்து விடுவார்கள். இதனால் வீடுகளில் அதிகமான சண்டைகளையும் பார்த்திருப்போம்.

அந்த வகையில், வாஷிங் மெஷின் உள்ள வீடுகளில் அதனை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் என்னென்ன ஆடைகளை வாஷிங் மெஷினில் போட்டு கழுவலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

சலவை இயந்திரத்தில் சலவை செய்யக் கூடாத ஆடைகள்

1. பட்டுத்துணி
ஆடைகளில் அதிக விலைக்கு வாங்கக் கூடிய ஆடைகளாக பட்டுப் புடவைகள் பார்க்கப்படுகின்றது. ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் பட்டு ஆடைகளை வாஷிங் மெஷினில் போடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஏனெனின் வாஷிங் மெஷினில் பட்டு புடவைகள் மற்றும் ஆடைகளை போட்டு சலவை செய்யும் பொழுது கடின சலவை காரணமாக, பட்டு நூல்கள் பிரிந்து வெளியே வர ஆரம்பிக்கும், அதன் பளபளப்பும் இழக்கப்படுகிறது.

சில சமயங்களில் பட்டு ஆடைகளில் எம்பிராய்டரி அலங்காரம் செய்திருந்தாலும் முழுமையாக இல்லாமல் போகும். எனவே விலைக் கொடுத்து வாங்கும் தூய பட்டு ஆடைகளை கெட்டு போகாமல் பார்த்து கொள்வது அவசியம்.

2. லெதர் ஜாக்கெட் பொருட்கள்
சிலர் குளிர்காலம் வரும் பொழுது தங்களிடம் இருக்கும் லெதர் ஜாக்கெட், பேன்ட், ஷூக்கள், பர்ஸ்கள் மற்றும் பெல்ட்கள் மற்றும் பைகளை சலவை இயந்திரத்தில் துவைக்கிறார்கள். இதனை சலவை இயந்திரத்தில் போட்டு துவைக்கும் பொழுது தோல் பொருட்கள் முழுவதும் சேதமடைவதுடன், சலவை இயந்திரமே சேதமடையும் அபாயம் ஏற்படும்.

3. இயந்திரத்தில் கம்பளி துணிகள்
குளிர்கால கம்பளி சூடான ஆடைகளையும் சலவை இயந்திரத்தில் துவைக்கக்கூடாது. அத்துடன் கையால் பின்னப்பட்ட ஸ்வெட்டர் மற்றும் ஜெர்சி போன்ற ஆடைகள் இயந்திரத்தில் சலவை செய்யக் கூடாது. ஏனெனின் இப்படி கடினமான ஆடைகளை சலவை செய்தால் அதன் நூலிழைகள் சேதமடைய ஆரம்பிக்கும். இவற்றை கையால் கழுவ வேண்டும்.

4. உள்ளாடைகள்
பெண்கள் அணியும் உள்ளாடைகளை சலவை இயந்திரத்தில் போட்டு கழுவக் கூடாது. ஏனெனின் உள்ளாடையை இயந்திரத்தில் கழுவும் போது கொக்கிகள் சேதமடையும் அபாயம், உள்ளாடையிலுள்ள பட்டைகள் மற்றும் வடிவம் தளர்வாகுதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

அதிலும் குறிப்பாக ஆடம்பரமாக பயன்படுத்தப்படும் உள்ளாடைகளை சலவை இயந்திரத்தில் கழுவும் பொழுது முற்றிலும் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.