முருகக்கடவுளின் அவதார நட்சத்திரம் விசாகம். நவகிரகங்களில் குரு பகவானின் 2-வது நட்சத்திரமாகத் திகழ்கிறது. `இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் புத்திமானாகவும், தான தர்மம் செய்பவராகவும், எவ்வித பேதமும் பார்க்காமல் நியாயத்தைப் பேசுபவ ராகவும் இருப்பார்கள். எனினும் முன்கோபம் இருக்கும்’ என்கிறது நட்சத்திர மாலை எனும் ஜோதிடநூல்.
`நற்குணவான்கள், நீதிமான்கள், இனிய பேச்சுக்குச் சொந்தக் காரர்கள், இறை வழிபாடு களில் விருப்பம் கொண்டவர்’ என்று விசாகக் காரர்களின் குணநலன் குறித்து விவரிக்கிறது ஜாதக அலங்காரம்.
துலாம் ராசியில் மூன்று பாதங்களும் விருச்சிக ராசியில் 4-வது பாதமுமாக பரவியிருக்கும் நட்சத்திரம் விசாகம். இரண்டு ராசிகளின் பலன்களும் அடங்கியிருக்கும். அதேபோல், துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் ஆளுமையும் இவர்களுக்கு உண்டு. அதன் விளைவாக உற்சாகம், பொருளாதாரம், விவேகம், மனோ திடம் ஆகியவை சிறப்பாக அமையும்.