கடன் குறைவடைய தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல இருக்கின்றன. நம்முடைய வருமானத்திற்குள் தான் குடும்பத்தை நடத்த வேண்டும். ஆடம்பர அத்தியாவசிய செலவுகளை செய்வதற்காக கடனை வாங்குவது என்பது முற்றிலும் தவறு. இருப்பினும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் அவசர தேவைக்காக பிறரிடம் இருந்து கடனை வாங்கி இருப்போம். அந்த கடனை அடைப்பதற்குரிய வழி தெரியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கால பைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த கடனை தீர்ப்பதற்குரிய வழியை அவர் காட்டுவார் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கால பைரவரின் அருள் நமக்கு இருந்துவிட்டால் நம்முடைய கர்ம வினைகள் தீருவதோடு அந்த கர்ம வினைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும் தீரும். கடன் பிரச்சனையும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையிலேயே நமக்கு ஏற்படுகிறது என்பதால் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்கு கால பைரவரின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக திகழ்வது செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி தினங்கள். இந்த தினங்களில் நாம் காலபைரவரை தொடர்ச்சியாக வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் தீருவதோடு கடன் பிரச்சினையும் முற்றிலும் நீங்கும்.

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 8 தேய்பிறை அஷ்டமிகள் செய்ய வேண்டும் அல்லது எட்டு செவ்வாய்க்கிழமை அல்லது 8 சனிக்கிழமை அல்லது 8 வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமிகளில் செய்யலாம். தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து தொடர்ச்சியாக எட்டு முறை இந்த வழிபாட்டை செய்தாலே நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும். இந்த வழிபாட்டை அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்தில் இருக்கும் காலபைரவரின் சன்னதியில் செய்யலாம் அல்லது வீட்டிலேயும் செய்யலாம்.

காலபைரவரின் சன்னதியில் செய்யும் பட்சத்தில் இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் வேப்ப எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற துணியில் 35 மிளகுகளை மூட்டையாக கட்டிப்போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி வைத்த பிறகு காலபைரவரை எட்டு முறை வலம் வர வேண்டும். மேலும் அன்றைய தினம் கால பைரவருக்கு மிளகு சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து ஆலயத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும். இந்த முறையில் நாம் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம்.

வீட்டிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். ஆனால் பலரும் வீட்டில் காலபைரவரின் படத்தை வைத்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தாம்பாலத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவு குங்குமத்தை கலந்து சிவப்பு நிற நீராக மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு அதற்குள் இரண்டு அகல் விளக்குகளை வைத்து வேப்பெண்ணெய் ஊற்றி 35 மிளகுகள் கட்டிய சிவப்பு நிற துணியை திரியாக போட்டு தீபமேற்றி அந்த தீபத்தை கால பைரவர் ஆகவே நினைத்து அந்த தீபத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.

மறுநாள் காலையில் அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் காலபைரவரை முழுமனதோடு வழிபாடு செய்து வந்தோம் என்றால் நம்முடைய கரும வினைகளும், கஷ்ட காலங்களும், கடன் பிரச்சனையும் முற்றிலும் நீங்கும். இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் தினமும் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு தெருக்களில் இருக்கக்கூடிய நாய்களுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி போடுவதன் மூலமும் காலபைரவரின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.