கீரை தொக்கு செய்யலாம் வாங்க

கீரைகளில் அதிக அளவு உயிர் சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றாடம் நம்முடைய உணவில் நாம் கீரைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து அதிகரிக்கும். அதன் மூலம் ஹீமோகுளோபினும் அதிகரிக்கும் என்று அனைத்து விதமான மருத்துவர்களும் கூறுவார்கள்.

ஒரே கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தினமும் ஒவ்வொரு கீரை என்ற வீதம் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கீரையை நாம் எப்பொழுதும் பொரியல் கூட்டு என்று செய்வதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக கீரையை தொக்காக செய்து கொடுத்தோம் என்றால் எப்பொழுதும் சாப்பிடும் அளவைவிட சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். அந்த கீரை தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

கீரை – ஒரு கட்டு,

வெங்காயம் – 3,
பூண்டு – 12 பல்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
, உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு

செய்முறை

முதலில் கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆறு பல் பூண்டையும் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மீதம் இருக்கக்கூடிய ஆறு பல் பூண்டை ஒன்றிரண்டாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பூண்டு இவற்றிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

வெங்காயமும் பூண்டும் வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பச்சை வாடை நீங்கிய பிறகு நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை அதில் சேர்த்து நன்றாக பிரட்டி மூடி போட்டு மூன்றிலிருந்து நான்கு நிமிடம் நன்றாக வேக விடுங்கள். இது நன்றாக வெந்த பிறகு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இதில் ஊற்ற வேண்டும்.

பிறகு மறுபடியும் ஒருமுறை கலந்து மூடி போட்டு மூடிவிடுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை இது அடுப்பில் இருக்கட்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். சுவையான கீரை தொக்கு தயாராகிவிட்டது. இதை சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு வைத்து தொட்டுக் கொள்ளலாம். காரசாரமாக அருமையாக இருக்கும்.