பொங்கல் என்றாலே சர்க்கரை பொங்கல் கரும்பு போன்றவை ஞாபகத்திற்கு வரும். அன்றைய தினத்தில் பல காய்கறிகளை போட்டு கூட்டாகவோ, பொறியலாகவோ, குழம்பாகவோ செய்யும் வழக்கம் என்பது இருக்கும். இதற்காக பலவிதமான காய்கறிகளை வாங்குவோம்.
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் மஞ்சள் பூசணிக்காய். மஞ்சள் பூசணிக்காயை வாங்கி சிறிதளவு மட்டும் பயன்படுத்திவிட்டு மீதமிருக்கக்கூடிய பூசணிக்காயை என்ன செய்யலாம் என்று யோசிப்போம். எப்படி செய்தால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடுவார்கள் என்றும் யோசிப்போம். அப்படிபட்டவர்கள் பூசணி புளிக்கறியை ஒரு முறை செய்ய வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அடிக்கடி வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு சுவையாக இருக்கும். இந்த பூசணி புளிக்கறியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணி – ஒரு கீற்று,
வெங்காயம் – 2,
தக்காளி – 3,
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
, கருவேப்பிலை – ஒரு கொத்து
, உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
வெல்லம் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் பூசணிக்காயின் உள்ளிருக்க கூடிய விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பூசணிக்காயின் தோலை நீக்க கூடாது. இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தை சேர்க்க வேண்டும். கடுகு பொறிந்த பிறகு சோம்பு வெந்தயத்தை சேர்க்க வேண்டும். பிறகு நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்க வேண்டும். அப்பொழுது ஒரு கொத்து கருவேப்பிள்ளையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம் முக்கால் பதத்திற்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து தக்காளி குழையும் வரை நன்றாக வேக விட வேண்டும். தக்காளி குலைந்த பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஞ்சள் பூசணியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து இதனுடன் குழம்பு மிளகாய் தூள், வெறும் மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடுங்கள். 10 நிமிடம் கழித்து பூசணிக்காய் நன்றாக வெந்திருக்கும். இப்பொழுது ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து அதில் சேர்த்து அதனுடன் ஒரு கால் டம்ளர் தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும்.
புளியின் பச்சை வாடை நீங்கிய பிறகு பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம். இதில் இனிப்பு சுவையும் இருக்கிறது, புளிப்பு சுவையும் இருக்கிறது, காரத்தன்மையும் இருக்கிறது என்பதால் சற்று வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருக்கும்.