கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்வோம் வாங்க!

மழை, குளிர் காலங்களில் பலரும் அதிக அளவில் சளி, இருமல் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். இது அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் செய்த வைத்தியமாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினாலும் இந்த இஞ்சியை சாப்பிட யாரும் முன்வருவதும் இல்லை.

அப்படிப்பட்டவர்களும் இஞ்சியை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வதற்கு இஞ்சி தொக்கை செய்து தரலாம். இதில் அனைத்து விதமான சுவைகளும் நிறைந்திருக்கும். மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகவே இது திகழ்கிறது. இந்த இஞ்சி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி பொடியாக நறுக்கியது – ஒரு கப் புளி – ஒரு கப் மல்லி – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் வெல்லம் – 1 1/2 கப் மிளகாய்த்தூள் – ஒரு கப் உப்பு – 1/2 கப் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் – ஒரு கப் கடுகு – ஒரு டீஸ்பூன் பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 கருவேப்பிலை – 3 கொத்து

செய்முறை

முதலில் இஞ்சியின் தோலை நீக்கி சுத்தமாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். முத்தலான இஞ்சியாக இருக்கும் பொழுது அளக்கும் கப்பில் கோபுரமாக அளக்கக் கூடாது. இஞ்சி இலக்காக இருந்தால் கோபுரமாக அளந்து கொள்ளலாம். எந்த கப்பில் இஞ்சியை அழைக்கிறோமோ அதே கப்பில் தான் மற்ற அனைத்தையும் அளக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவையும் நன்றாக இருக்கும்.

புளியை எடுத்து அதில் இருக்கக்கூடிய கொட்டை, நாறு, ஓடு போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் புளியை போட்டு அடுப்பில் குறைந்த தீயில் வைக்க வேண்டும். புளி நன்றாக வெந்து குலையும் வரை அடுப்பிலேயே இருக்கட்டும். இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும்.

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மல்லி, வெந்தயம், சீரகம் இவை மூன்றையும் வறுத்து அதை தனியாக மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இஞ்சியின் நிறமும் அளவும் சுருங்கிய பிறகு இஞ்சியையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு பொடி செய்த பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் புளி கரைசலையும் அதில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயில் வெல்லத்தை சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைக்க வேண்டும். பாகுபதம் தண்ணீரில் போட்டால் கரையாமல் இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் கரையாமல் இருக்கும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி புளி விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி, புளி கரைசலில் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான இஞ்சி தொக்கு தயாராகி விட்டது. இதன் சூடு ஆறிய பிறகு சுத்தமான தண்ணீர் இல்லாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

கடைசியாக மேலே சிறிதளவு எண்ணெய் ஊற்றி வைத்தோம் என்றால் எவ்வளவு மாதம் ஆனாலும் இது கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். இதை சட்னியாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்னியாக பயன்படுத்தும் பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.