வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் வெளியாகிய செய்தி!

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களில் 27% அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பாக 3675 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 4658 முறைப்பாடுகளாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் குறித்த மோசடிகள் தொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

மேலும், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“2024 ஆம் ஆண்டில், 15 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 132 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக, 2024 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் 900 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. “2023 ஆம் ஆண்டில் 182 மட்டுமே மேற்கொள்ள முடிந்தன” என்றார்.