USAID இன் அனைத்து திட்டங்களும் பங்களாதேஸில் நிறுத்தம்!

யுஎஸ்எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் பங்களாதேஸில் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உதவிகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்து, மறுமதிப்பீடு மற்றும் மறுசீரமைப்பு செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்து யுஎஸ்எயிட் அமைப்பு பங்களாதேஷிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த நிர்வாக உத்தரவுக்கு அமைய, இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளையும் யுஎஸ்எயிட் நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவினால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தொடர்பான விரிவான மீளாய்வுக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு இன்னும் 84 நாட்களில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் பங்காளாதேஷில், யுஎஸ்எயிட் இன் அனைத்து உதவித் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை குறித்த உதவித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் எனவும் யுஎஸ்எயிட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்களாதேஸ்க்கு வழங்கப்படும் உதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், மொஹமட் யூனூஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.