எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்ப்போம்!

சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய்களின் விலை உயர்வு குறித்து காலியில் நேற்று மக்கள் வினவிய போது பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.

காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று காலை சென்றிருந்த விக்கிரமசிங்க, மறைந்த ஊடகவியலாளர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விக்டர் ஐவனின் மறைவு பாரிய இழப்பாகும் எனவும், அவர் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த ஊடகவியலாளரின் வீட்டில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூடிய போது, சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை குறித்து கேள்விகளை எழுப்பினர், சிலர் ஒரு தேங்காய் ரூ. 200 க்கு விற்கப்படுவதாகவும் கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க என்றும் கூறினர்.

“சேர், நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை, எங்களுக்கு நீங்கள் தேவை” என்று அம்மக்கள் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.