முருகனுக்கு உகந்த விரத நாட்கள் பல இருப்பினும் தைப்பூச விரதம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அதுவும் தைப்பூச விரதம் பழனி முருகனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அப்பேற்பட்ட இந்த விரதத்தை 21 நாட்கள் 48 நாட்கள் 7 நாட்கள் 9 நாட்கள் அல்லது தைப்பூசம் வரக்கூடிய அன்றைய தினம் மட்டும் என அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு இருப்பார்கள். இப்படி இருக்கக்கூடிய இந்த விரதத்தை எளிமையாக எப்படி இருப்பது என்பதையும் அந்த விரதத்தை எந்த நேரத்தில் துவங்கினால் நம்முடைய துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழலாம் என்பதையும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சபரிமலை ஐயப்பனை நினைத்து எப்படி 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து அவரை தரிசனம் செய்வார்களோ, அது போன்றதொரு முக்கியமான ஒரு விரதம் தான் இந்த தைப்பூச விரதம். இதையும் 48 நாட்கள் ஒரு வேளை மட்டும் உண்டு முருகப்பெருமானுக்கு பூஜை செய்து விரதம் இருந்து பழனிக்கு காவடி எடுத்து சென்று வழிபாடு செய்து வணங்குவது பெரும்பாலான வழக்கம். அப்படி செல்ல முடியாதவர்கள் வீட்டில் அருகில் உள்ள முருகர் ஆலயம் செல்வதும் அல்லது வீட்டில் இருந்தபடியே பூஜை செய்வது போன்றவையும் உண்டு
இது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அமையும். அப்படி இருக்கக்கூடிய இந்த விரதத்தை துவங்க சில நாட்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு நாள் தான் செவ்வாய்க்கிழமை. முருகர் வழிபாடு என்றாலே செவ்வாய்க்கிழமை என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் இந்த தைப்பூச விரதத்தை துவங்குவது மிகவும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. எமகண்டம் என்றாலே எதுவும் செய்யக் கூடாது என்று பலரும் இந்த நேரத்தில் எதையும் செய்வதில்லை.
ஆனால் எமகண்ட நேரத்தில் தைப்பூச விரதத்தை முருகனை வேண்டி துவங்குவது நீங்கள் நினைத்த காரியத்தை உடனே முடிக்கக்கூடிய ஆற்றலை தரும் என்று சொல்லப்படுகிறது. வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தைப்பூசம் வருகிறது. இதுவரை தைப்பூச விரதம் எடுக்காதவர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அன்று இந்த விரதத்தை துவங்கி ஒருவார காலம் தொடர்ந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதம் துவங்க நாளை காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையெல்லாம் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் முருகர் சிலை வேல் இருந்தால் அவற்றிற்கு அபிஷேக அலங்காரங்கள் செய்து சர்க்கரைப் பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் அதன் பிறகு உங்களின் விரதத்தை துவங்குங்கள். இந்த விரத காலத்தில் அசைவத்தை தவிர்ப்பது முக்கியம். சிலர் மாலை அணிந்தும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அப்படியானவர்களும் நாளைய தினத்தில் இந்த விரதத்தை துவங்கலாம். இந்த ஆறு நாட்களும் முருகனை நினைத்து தினமும் காலையில் தீபம் ஏற்றி அருகில் உள்ள ஆலயம் சென்று முருகனை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் கொடிமரம் இருக்கும் ஆலயம் சென்று முருகரை வணங்குவது மிகவும் சிறந்தது.
இந்த நேரத்தில் முருகருக்கு உகந்த கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் வேல்மாறல் இவற்றில் ஏதேனும் ஒன்றை படியுங்கள் எதுவும் முடியாதவற்றில் ஓம் சரவண பவ என்ற முருகனின் நாமத்தை மட்டுமாவது இடைவிடாது ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்த செவ்வாய்க்கிழமை அதாவது தைப்பூசத் அன்று இந்த விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். விரதத்தை முடிக்கும் முறையும் உங்களின் வசதிக்கு ஏற்பதான் பழனி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதத்தை முடிக்கலாம். காவடி எடுத்து விரதத்தை முடிப்பவர்களும் செய்யலாம்.
எதுவும் முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முருகனை நினைத்து பூஜை செய்து நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம். அன்றைய தினத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்து அனைவருக்கும் தானம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இந்த விரத முறையில் முக்கியமானது மனதாலும் சிந்தையாலும் முருகனையே நினைத்து உங்களுடைய வேண்டுதல் எதுவும் அது நிறைவேற வேண்டுமென்று வேண்டுவதும் அதற்கான முயற்சியை எடுப்பதும் மிகவும் முக்கியமானது. இத்தனை நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் கூட தைப்பூசம் அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருந்தாலும் முருகனின் அருளை பரிபூரணமாக பெறலாம்.