செரிமான அமைப்பை மேம்படுத்தும் வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் உடல் எடை மற்றும் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும்.வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியன நிறைந்து காணப்படுகின்றது.

இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயை அதன் வளவளப்பு தன்மை காரணமாக பலரும் தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் வளவளப்பு தன்மை கொஞ்சமும் இல்லாமல், அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் வெண்டைக்காய் பெரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்
வெண்டைக்காய் -250 கிராம்

எண்ணெய் -5 தே.கரண்டி

சீரகம் -1 தே.கரண்டி

கடுகு -1/2 தே.கரண்டி

வெங்காயம் -1 கப் நறுக்கியது

தக்காளி விழுது -1 கப்

இஞ்சி பூண்டு விழுது -1 தே.கரண்டி

கறிவேப்பிலை -1 கொத்து

சீரகத்தூள் -1 தே.கரண்டி

மல்லித்தூள் -1 தே.கரண்டி

கரம் மசாலா -1/2 தே.கரண்டி

மஞ்சள்தூள் -2 சிட்டிகை

மிளகாய் தூள் -1 தே.கரண்டி

உப்பு -தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து, அவை சற்று நிறம் மாறும் வரையில் வதக்கிக் தனியான ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில், 3 தே. கரண்டி எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிய விட்டு,பின்னர் அதில் சீரகத்தை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, கண்ணாடி பதத்துக்கு வதக்கி. அதனுடன் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிய பின்னர் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அரைத்த தக்காளி விழுதையும் அதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வந்த பின்னர், வதக்கி வைத்த வெண்டைக்காயையும் சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக சமைத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான வெண்டைக்காய் பொரியல் தயார்.