வருணன் விமர்சனம்

தயாரிப்பு : யாக்கை பிலிம்ஸ் மற்றும் யான் புரொடக்சன்
இயக்கம் : ஜெயவேல் முருகன்
நடிகர்கள் : துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி, மகேஸ்வரி
இசை : போபோ சசி
வெளியான தேதி : 14.03.2025
நேரம் : 2 மணி நேரம்
ரேட்டிங் : 2.25/5

கதைக்களம்
சென்னை ராயபுரம் பகுதியில் ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் தண்ணீர் கேன் போடும் வியாபாரம் செய்கின்றனர். ராதாரவியிடம் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். மற்றொருபுறம் சரண்ராஜின் மனைவி மகேஸ்வரி, அவரது சகோதரர் சங்கர் நாக்விஜயன் இருவரும் தண்ணீர் கேன் உடன் சேர்த்து சுண்ட கஞ்சி வியாபாரம் செய்கின்றனர். அவர்களை மதுவிலக்கு போலீஸ் அதிகாரியான ஜீவா ரவி கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

இதனிடையே துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேபிரில்லாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த மோதலின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

நீரின்றி அமையாது உலகு என்பது தான் படத்தின் மையக்கரு. ஆனால் எடுத்திருப்பது கேங்ஸ்டர் படம். பஞ்சபூதங்களில் ஒன்றாக இருக்கும் தண்ணீர் இயற்கை நமக்கு கொடுத்த கொடை. அதை வியாபாரம் ஆக்கி அதன் மூலம் காசு பார்ப்பவர்களை இயக்குனர் ஜெயவேல் முருகன் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

தண்ணீர் கேன் போடும் தொழிலில் ஏற்படும் மோதலை கேங்ஸ்டர் கதையாக எடுத்துள்ளார். 2 கோஷ்டிகளுக்கிடையே நடைபெறும் யுத்தம், அந்த யுத்தத்தில் தண்ணீர் கேன் பிரதானமாக இருக்கிறது. அதோடு படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் வருண பகவான் போல் சத்யராஜ் வாய்ஸ் கொடுத்துள்ளார். துஷ்யந்த் ஜெயபிரகாஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு வடசென்னை பையன் போலவே மாறி நடித்துள்ளார்.
கேபிரில்லாவுக்கு பெரிதாக கேரக்டர் இல்லை. ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் அனுபவம் நடிப்பை கொடுத்துள்ளனர். வடசென்னை பெண் தாதாவாக மகேஸ்வரி மிரட்டி உள்ளார். அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சங்கர் நாக் விஜயன் வில்லத்தனமாக கெத்து காட்டி நடித்துள்ளார். இவர்களோடு படத்தில் நடித்துள்ள மற்ற கேரக்டர்களும் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர்.

ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவில் வடசென்னை பிரமாண்டமாக தெரிகிறது. போபோ சசி இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னனி இசையும் ஓகே ரகம்.

பிளஸ் & மைனஸ்
தண்ணீர் கேன் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை வடசென்னை களத்தில் சொல்லியிருப்பது சிறப்பு. ஆனால் படம் முழுவதும் திரும்பத் திரும்ப ஒரே காட்சிகள் வருவது சலிப்பு தட்டுகிறது. அதோடு துண்டு, துண்டாக காட்சிகள் நிற்பது படத்தின் ரசனையை குறைக்கிறது.