சாணக்யனின் குற்றச்சாட்டை மறுக்கும் நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான நேற்றைய(15) விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.

இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார்.

ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம். ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம்.

பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த நடவடிக்களை எடுக்கும் போது நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம்.

பாதாள உலக கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது பிலிப்பைன்ஸில் நடந்ததை போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடையும்.

இங்கே சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர்.

அதன்போது ஏதேனும் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வது பிரச்சினை இல்லை.

ஆனால், அதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக்கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது.

வெறுப்புணர்வற்ற அரசியலை இங்கே கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசு என்ற விடயத்தில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.