நோன்பை முடித்து வீடு திரும்பிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

கம்பளை – கண்டி வீதியில் கல்கெடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கம்பளை, கண்டி வீதியை சேர்ந்த அகமட் ரிஸ்வி மொஹமட் ரிஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவர், கம்பளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியின் அக்குரணைப் பகுதியில் பணிபுரியும் இந்த இளைஞன், நேற்று மாலை (18) தனது பணியிடத்திலிருந்து தனது நோன்பை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கார் ஒன்று தவறான பாதையில் வந்து இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரின் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.