இலங்கையில் இருந்து லண்டனுக்கு இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 (கொழும்பு முதல் இலண்டன்) மற்றும் UL 504 (இலண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் இயக்கப்படாது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மின்சாரத் தடை மற்றும் தீ விபத்து காரணமாக முழு நாளும் மூடப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பூட்டு
அதேவேளை லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
உலகின் மிக மும்முரமான விமானநிலையமாக வர்ணிக்கப்படும் ஹீத்ரோ விமானநிலையம் அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை எந்த காரணம் கொண்டும் பயணிகளை அங்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை மேற்கு லண்டனில் உள்ள விமானநிலையத்தில் இன்று மாத்திரம் 1351 விமானங்களின் பயணம் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்ஸ் என்ற பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் மூண்ட தீ காரணமாக 16300 வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.