கடந்த 21 ஆம் திகதி கந்தர பொலிஸ் பிரிவின் தெவிநுவரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, தெவிநுவரவில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வானுக்கு தீ வைத்ததில் சந்தேக நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சிங்காசன வீதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு 11:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
வானில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிளை மோதி, பின்னர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பசிந்து தாரகா (29) மற்றும் யோமேஷ் நடீஷன் என அடையாளம் காணப்பட்ட இருவருக்கும், ‘பலே மல்லி’ என்று அழைக்கப்படும் குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள பிரதான சந்தேக நபர், துபாயில் பதுங்கியிருப்பதாகவும், பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஷெஹான் சத்சர என்றும், அவர் “பலே மல்லி” என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாத்தறை பிரிவு குற்றப்பிரிவு, கந்தர பொலிஸாருடன் இணைந்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.