இளநீரில் பொட்டாசியம், கேல்சியம், மாங்கனீசு, ஆக்ஸிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளன. இளநீரில் சர்க்கரை, கார்போஹைடரேட், காலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இதனால் கோடையில் இளநீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைப்பதோடு ஆரோக்கியத்தையும் தரும்.
இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் முழு நன்மையை பெறலாம் என்று சிலருக்கு ஐயம் இருக்கும். காலையில் இளநீரை குடிப்பதே சிறந்ததாகும். இளநீருடன் நம் நாளை தொடங்குவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றது. காலையில் இளநீர் அருந்துவது உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்து நன்றாக உணரச் செய்யும்.
கோடைக்காலத்தில் இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
1. இளநீரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் நம் உடலுக்கு அவசியமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் வரும் நோய்த்தொற்றுகளை சரிசெய்ய உதவுகிறது.
2. கோடைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது இளநீர் சிறந்த தீர்வாக அமைகிறது.
3. கோடையில் சூரிய ஒளி மற்றும் மாசு நம் சருமத்தை பொலிவிழக்க செய்யும். தினமும் இளநீர் குடிப்பதன் மூலமாக அதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.
4. கோடைக்காலத்தில் நம் உடலில் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. பெரும்பாலும் மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, இளநீர் குடிப்பதன் மூலமாக புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக உணரலாம்.
5. இளநீரில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.
6. கர்ப்பிணி பெண்கள் இளநீரை அருந்துவதால் நீரேற்றத்துடன் இருக்க உதவும். அவர்களுக்கு இருக்கும் Morning sickness மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை இது சரிசெய்ய உதவுகிறது.
7. உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர் எடுத்துக்கொள்வது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சிறந்த வழி.
இளநீரில் ஆரோக்கியம் தரும் விஷயம் எண்ணற்றவை இருந்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள் நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே இளநீரை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.