செய்யத குற்றத்திற்கு 58 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நபர்!

ஜப்பானைச் சேர்ந்தவர் ஐவா ஹகாமடா (88). முன்னாள் குத்துச் சண்டை வீரரரான இவர், கடந்த 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ஜப்பானில் உள்ள ஹமாமத்சு பகுதியில் மிசோ பீன்ஸ் பேஸ்ட் நிறுவன ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினர் 3 பேரையும் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவருக்கு 1968ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தொடர் மேல்முறையீடு மற்றும் மறுவிசாரணை கோரிக்கை காரணமாக அவர் தூக்கிலிடப்படவில்லை, அவரது சகோதரியால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மேல்முறையீடு 2014இல் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது, மரண தண்டனையை ரத்துசெய்த நீதிமன்றம், விசாரணையை நிலுவையில் வைத்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறுவிசாரணையின்போது அவர் நிரபராதி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர், உலகில் மரண தண்டனை கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராவார். இதைத் தொடர்ந்து, செய்யாத குற்றத்திற்காக ஹகாமடாவுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்ததற்காக ஷிசுவோகா மாகாண பொலிஸார் நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ஹகாமடா முதுமையடைந்த தனது சகோதரியுடன் வாழ்ந்து வரும் நிலையில், ஷிஸோக்கோ நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று அவருக்கு நிவாரணம் அறிவித்தது. அதன்படி, அவர் சிறையில் கழித்த ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 12,500 ஜப்பானிய யென் வீதம் மொத்தம் 21,73,62,500 யென் அளவிலான பணம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது இலங்கை மதிப்பில் 41 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இந்த பணமானது அவர் 58 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்பீடாகக் கருதப்படாது என்றும் அரசு செய்த தவறுகளை 200 மில்லியன் யென்கள் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என ஹக்காமட்டாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.